Showing posts with label 'ராட்டினம்'. Show all posts
Showing posts with label 'ராட்டினம்'. Show all posts

Sunday, May 27, 2012

'ராட்டினம்

சுற்றலில் விடுகிற காதல் கதை! இதைவிட பொருத்தமாக வேறென்ன டைட்டில் வைக்க முடியும்? அறியாத வயசில் வரும் காதல் இரு குடும்பங்களை எப்படியெல்லாம் படுத்தி வைக்கிறது என்பதை சுருக்கென்று தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தங்கசாமி.
காஸ்ட்டிங் என்ற முதல் முயற்சியிலேயே நமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறார் டைரக்டர். அதன்பின் திரைக்கதையில் அடுக்கடுக்காக சூழும் திகில் வலை, மெல்ல அதற்குள் நம்மை இழுத்துக் கொள்வதால் செகண்ட் ஆஃப்-ல் தியேட்டரே ஒரு அமானுஷ்ய அமைதிகாக்கிறது.
புதுமுகம் லகுபதி நண்பனின் காதலுக்கு ஹெல்ப் பண்ணுகிற நேரத்தில் அகஸ்மாத்தாக சந்திக்கிறார் ஸ்வாதியை. ஹெல்மெட் போட்டிருக்கும் அவரிடம் ச்சும்மாச்சுக்கும் ஒரு ஐ லவ் யூ சொல்லிவிட்டு அந்த நேரத்திலேயே அதை மறந்தும் போகிறார். ஆனால் மறுநாள் அதே நண்பனுடன் அவனுடைய காதலியை பார்க்க ஸ்கூல் வாசலில் நிற்கும்போது தன்னை பார்க்கதான் லகுபதி நிற்பதாக கருதுகிறார் ஸ்வாதி. இனிமே பின்னாடி வந்தே...? என்ற தோழிகளின் எச்சரிக்கை லகுபதிக்கு சூடேற்ற, விளையாட்டு காதல் வினையாகிறது.
ஸ்வாதியின் பேக்ரவுண்ட் பெரிசு. லகுபதியின் அண்ணனுக்கும் அரசியல் செல்வாக்கு. சமபலத்துடன் மோத தயாராகும் இரு குடும்பத்திலும் இடி விழ வைக்கிற மாதிரி சிறுசுகள் இரண்டும் ஓடிப்போகிறார்கள். அப்புறமென்ன, ஒரு ரத்த பலி அரங்கேறுகிறது. தொடர்ந்து புது ஜோடிக்கு அதிர்ச்சி. கதறிக்கொண்டே வீட்டுக்கு ஓடி வரும் லகுபதியை விட்டுவிட்டு ஸ்வாதியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறது அவரது வீடு. அதற்கப்புறம் வரும் க்ளைமாக்ஸ்... அநேகமாக தமிழகம் முழுக்க தொண்ணு£று சதவீத காதலர்களுக்குள் நடக்கும் மவுன விசும்பல்.
ஒரு பையன், அவனை கெடுக்கும் நாலு தோஸ்த்துகள் என்று ஒரே மாவுதான். ஆனால் அதற்குள் ஒரு அடங்கா சுவாரஸ்யத்தை அள்ளி இரைத்திருக்கிறார் டைரக்டர். நண்பனுக்காக இரைக்க இரைக்க சைக்கிள் ஓட்டி வரும் லகுபதிக்கு, அதே நண்பனிடம் லவ் லெட்டர் கொடுத்து கொடுக்க சொல்கிற அந்த மாநிற மயில், ஊருக்கு நாலு பேராவது இருப்பாள். வீட்டுக்கு தெரியாமல் பீர் ஏற்றிக் கொள்ளும் அந்த விடலைப்பசங்களின் அரட்டைகளும் செம கிக்.
புதுமுகம் லகுபதிக்கு நல்ல பிளாட்பார்ம் அமைந்தால் அடுத்த ஸ்டெப் ஹீரோவாகலாம். அண்ணனிடம் அறைவாங்கிக் கொண்டு முணுமுணுப்பதையும், போலீசில் சிக்கிக் கொண்டு பரிதவிப்பதையும் மட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ரோஜாப்பூவில் பன்னீர் ஸ்பிரே அடித்ததை போல இருக்கிறார் ஸ்வாதி. ரொம்ப சின்னப்பொண்ணு. ரெண்டு வருஷம் கழிச்சு மரத்தை சுற்றி ஆடவிட்டால் மனசு தாங்கும்.
டைரக்டர் தங்கசாமியே அண்ணனாக நடித்திருக்கிறார். அவ்வளவு கச்சிதம். அவருக்கு மனைவியாக வரும் அந்த தொலைக்காட்சி வாசிப்பாளர் சினிமாவை நம்பி அந்த வேலையை கூட விட்டுத்தள்ளலாம். எதிர்காலம் இருக்குங்கக்கா...
பிற நடிகர்களில் அந்த பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் அலட்டல் இல்லை. சபாஷ்.
ராஜ்சுந்தரின் அழகான ஒளிப்பதிவில் கரைந்து போகிறோம் நாம். மனு ரமேசன் இசை இன்னும் சுகமாக இருந்திருக்கலாமோ?
நியூ ஃபேஸ்கள் நடிக்கிற படம் என்றாலே தியேட்டர் வாசலில் ஆம்புலன்சை நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே போகிற அவல நிலைக்கு ரசிகனை தள்ளிவிடுகிற சில படங்களுக்கு மத்தியில், இந்த 'ராட்டினம்' பளபள பிளாட்டினம்தான்.

-ஆர்.எஸ்.அந்தணன்